முக்தி தரும் ஏழு நகரங்களுள் ஒன்று. மதுரா, ஹரித்துவார், காசி, உஜ்ஜயினி, பூரி, துவாரகை ஆகியவை மற்ற ஆறு நகரங்கள். பஞ்ச பூதத் தலங்களுள் பிருத்வி (மண்) தலம்.
ஒரு சமயம் கைலாயத்தில் பார்வதி தேவி, விளையாட்டாக சிவபெருமான் கண்ணை தமது கைகளால் மூட, உலகம் முழுவதும் இருண்டது. தனது தவறை உணர்ந்த பார்வதி, தனது தவறை மன்னிக்கும்படி வேண்ட, சிவபெருமானும், பூவுலகில் கம்பா நதிக்கரையில் கச்சியம்பதிக்குச் சென்று தம்மை வழிபடும்படி அருளினார். பார்வதியும் அவ்வாறே, இத்தலத்திற்கு வந்து ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு வந்தார்.
அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான், நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். மணலால் தாம் அமைத்த லிங்கம் தண்ணீரில் மூழ்கி விடாமல் இருக்க பார்வதி தேவி அதை அணைத்தாள். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதிக்கு காட்சியளித்து மீண்டும் கயிலாயத்திற்கு அழைத்துச் சென்றார். மாமரத்தின் அடியில் வந்து தங்கியதால் இப்பகுதி 'கச்சி ஏகம்பம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'ஏகாம்பரநாதர்' அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மணலால் அமைக்கப்பட்ட மூர்த்தி. அம்பாள் 'காமாட்சி' அம்மனுக்கு தனிக் கோயில் உள்ளதால் காஞ்சிபுரத்தில் உள்ள எந்த சிவன் கோயிலுக்கும் அம்மன் சன்னதி கிடையாது. உற்சவ அம்மன் 'ஏலவார் குழலி' என்று அழைக்கப்படுகிறார்.
பிரகாரத்தில் விகட சக்ர விநாயகரும், மாவடி கந்தனும் தரிசனம் தருகின்றனர். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். இங்கு நவக்கிரங்கள் அனைவரும் தங்களது வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகின்றனர்.
திருவொற்றியூரில் தமது கண் பார்வையை இழந்த சுந்தரமூர்த்தி நாயனார் தமது இடக்கண்ணில் பார்வை பெற்ற தலம். திருவாரூரில் தமது வலக்கண் பார்வையைப் பெற்றார்.
பதினோராம் திருமுறையில் உள்ள க்ஷேத்திர வெண்பா பாடிய ஐயடிகள் காடவர்கோன் அரசாண்ட ஊர். திருக்குறிப்புத் தொண்டர், கழற்சிங்க நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோர் முக்தி அடைந்த தலம். சாக்கிய நாயனார் வழிபட்டது அருகில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயில் என்று கூறுவர்.
இக்கோயிலின் தல விருட்சமான மாமரம் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. நான்கு வேதங்களே, நான்கு கிளைகளாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இம்மரத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நான்கு சுவைகளில் மாம்பழங்கள் உள்ளன.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான நிலாத்திங்கள் துண்டப் பெருமாள், ஏகாம்பரேஸ்வரர் சன்னதியின் பிரகாரத்தில் தான் உள்ளார்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் நான்கு பதிகங்களும், திருநாவுக்கரசர் ஏழு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் நான்கு இடங்களில் இத்தலத்தைப் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|